பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 டிசம்பர், 2015

விடியலை நோக்கி ...

தொடர் வண்டியைக் காட்டிலும்
பிணங்களையே மிகையாகச் சுமக்கப்
பழகிக் கொண்டு விட்டன தண்டவாளங்கள்

இறந்த பின்னும்
கொன்று கொண்டேயிருத்தலும்
இங்கே முறைமையாகிவிட்டன

இன்னும் செருப்பைக் கையிலெடுத்தே
பயணிக்கிறார்கள் எம் பள்ளிச் சிறார்கள்

எரிக்கப்படுகிறது
சேரிக்குள் வர முயலும்
கடவுளின் தேரும்
கடவுளின் பிள்ளைகளின் ஊரும்

மொழியை முடமாக்கி
உட்பிரிவின் உட்புகுந்து
முதுகெலும்பு முறிக்கப் படுவது
உணரமுடிகிறது நன்றாய்

வீழும் உடல்கள் குறைவதில்லை
விதைத்த விதைகளும் இங்கே அப்படியே
விடியலை நோக்கி விரையும் நம் பயணம்
எழுச்சியோடு மீட்டெடுப்போம்
நாளைய மலர்ச்சி நமக்கானதே

----------------------- எழில் (ச.க.இரமேசு)

[பாக்கூடல்(கவிதை சங்கமம்) குழுமத்தில் நிகழ்ந்த போட்டியில்
இரண்டாமிடம் பெற்ற பா]

திங்கள், 14 ஏப்ரல், 2014

காத்திருப்பின் நீளத்தில்


நீயின்றி வெறுமையால்
நிரம்பும் இருண்மை
சுவற்றில் ஆங்காங்கே நூலாம்படை
சுற்றிலும் விரிந்த நூல்களின் படை
ஊடைக்குள் பாவாய் அவற்றோடு
பின்னிக் கிடக்கிறேன்
வெளிக்காற்றை விடுத்து
என் உயிர்க்காற்றில் உலவுகிறேன்
வயிற்றுணவை மறந்து
படித்துப் படித்து
விழிகளால் உணர்வை
நிறைத்துக் கொள்கிறேன்
உலரும் நாவினை
நனைத்து நனைத்துத்
தீர்ந்து போனது தேநீர்
தீராத உன் நினைவுகளோடு
இப்படியாய்
உனக்கான என் காத்திருப்பின் நீளத்தில்
சிறுத்துப் போகிறது சீனப் பெருஞ்சுவர்

ச.க.இரமேசு எழில்

இறுதி மழைத்துளியாய்...


குடையின்றி மழையில்
நனையும் எனதுரிமை
சாளரம் வழியே
சாரல்களை விரல்களால்
உணர்தலென்று குறைக்கப்பட்ட
பின்னொரு பொழுதிலும்

பட் பட் என்ற கதவின்
இசைத் திளைப்பைக் கடந்து
வீசிய காற்றில் விலகிய
என் ஆடையுள் மேய்ந்து

பட்டென அறைகிறது உன்
பாலியல் உணர்வுகள்
படையெடுக்கிறாய் என்னுள்

மழை காணும்
பேராவலும் மறுதலிக்கப்பட

இழுத்து மூடுகிறேன் ஒருசேர
கதவுகளையும் என் கனவுகளையும்

வான்மழை சுரத்தல்
காணக்கிடைக்காது

ஆண்மலை சுமக்கிறது
என் பெண்ணுடல்

உன் வல்லுறவிடையிலும்
என் வலிகளினிடையிலும்
வலுக்கிறது நம்பிக்கை
இருக்க வாய்ப்பில்லை
இது இறுதி மழைத்துளியாய்...

..இரமேசு எழில்

அடிக்கடி எழுகிறது அதே வினா...

புரிதலின் தவறில்
புலம் பெயர்ந்தவனின் வலி

எய்யும் கணைகள் எனைத் துளைக்க
எவ்விடமும் விழுப்புண்கள்

முளைக்கிற தன்முனைப்பில்
முடமாகிறது மூக்கின் முனை

உடைத்து நொறுக்கும்
உள்ளக் கண்ணாடியின்
சிதறிய துகள்களிலும்
சிலிர்ப்பாய்ச் சுவடுகள்

வடிவில் நம்பிக்கையற்றவன்
மீண்டும் ஒட்டவைத்தலில்
வடுக்களால் நிறைகிறேன்

ஊற்றப்படும் கலன்களில்
நீர்மமாய் நிறைந்து வழிந்து
நீர்த்துப் போகிறேன்

கொதிநிலையிலும்
குளிர்நிலையிலும்
குழம்புகிறேன்

மீளச் சில பொழுதோ பல பொழுதோ
முயன்று முயன்று தோற்கிறேன்
யாருமற்ற தனிமையில்

காலச்சுழற்சியிலும்
ஞாலச் சுழற்சியிலும்
காணக் கிடைக்காது கலைகிறேன்

இழந்த இலக்குகளால்
இலக்கணமிழந்து இழுக்குறுகிறேன்

கூட்டுகிறேன் குழிகைகளை
இரவுகளில் இரக்கமற்று இறக்க

தவறுகள் களைதலில் சூல்கொள்கின்றன
வரைமுறையில்லாத வழக்குகள்

ஒவ்வொரு புத்தாண்டிலும்
புதுப்பிக்கப்படுகிறது
அடிமைத் தனத்தின்
அகன்ற பரப்பு

என்னுள் அடிக்கடி எழுகிறது
அதே வினா
இன்னும் நான் மீதமிருக்கிறேனா?

ச.க.இரமேசு எழில்

சொல்லினும் நீளும்

உங்கள் எழுத்துக்கள் தோன்றும்போது
எம்மில் படைக்கப்பட்டிருந்தன
இலக்கியங்களும் இலக்கணங்களும்

நீங்கள் நெருப்பைக் கண்டு
அஞ்சிய வேளையில்
நாங்கள் அதில்
சமைத்துக் கொண்டிருந்தோம்

சொல்லினும் நீளும்
சொல்லாதவை அதனினும் நீளும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட
எம் வரலாறை மெய்ப்பிக்கும்
தொல்லியல் ஆய்வைத் தொடர விடாது
மறுதலிக்கும் உம்
மானங்கெட்ட மக்களாட்சியின்
வெறும் சக்கைகளில் சாறு பிழியும்
சட்டங்களில் எமக்கு உடன்பாடில்லை

தீமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்
நிலைப்பாட்டின் முறைமையும்
விளங்கவில்லை

ஒவ்வாத காரணியம் சொல்லி
ஒதுங்கவும் முடியவில்லை

அவனை வீழ்த்த இவனுக்கென்றும்
இவனை வீழ்த்த அவனுக்கென்றும்
மாற்றி மாற்றி வாக்களிக்கவே
அகவைக்கு வந்தோம்

புழுத்த புராணப் புரட்டைப்
புறக்கணிக்க மறந்தோம்

தமிழர் ஆண்டை மறந்தோம்
தமிழர் ஆண்ட நிலமிழந்தோம்
தனித்தமிழ்க் குடியரசிழந்தோம்
தமிழரல்ல இந்தியர் என்றே
இளித்தோம் இழிந்தோம்

வந்தாரை வாழ்வித்துத்
தாம் வீழ்ந்து போவதில்
எம்மோடு போட்டியிட
யாரும் இலர்

இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்ற பின்னும்
வாருங்கள் களவாட

இன்னும் எஞ்சியிருக்கிறது எங்களிடம்
முற்றுப் பெறாத கற்பனைகளும்
நிறைவேறாத கனவுகளும்

..இரமேசு எழில்

மகளே!
பனிமலர்
உனக்கான களிப்பு
கரைபுரண்டு கிடக்கிறது
எப்போதும் இருக்கிறது
நீ விரும்பும் விடுதலை
உன் மீதான திணிப்பென்று
ஏதுமில்லை என்னிடம்
சொல்லிக் கொடுங்கள்
என்பவர்களுக்குத் தெரியாது
உன்னிடமிருந்து
நான் கற்றுக் கொள்வது
உனதான ஒவ்வொரு செயலிலும்
உயிர்த்துக் கொண்டேயிருக்கும்
என் உணர்வுகள்
என்னைப்போல நடித்து
என் இயல்பின் குறை களைகிறாய்
உனக்கெனக் கொடுப்பதை
பொம்மைகளுக்கும்
கொடுத்துவிட்டே உண்கிறாய்
அவைகளைக் குளிப்பாட்டிய பிறகே
நீ குளிக்கிறாய்
அவைகளுக்காகத்
தாலாட்டுப்பாடியே நீ உறங்குகிறாய்
பொறியாளருக்கு வீடுகட்டித் தருகிறாய்
மருத்துவருக்கு
வலிக்காமல் ஊசி போடுகிறாய்
தாய்க்குச் சமைத்துத் தருகிறாய்
எனக்குத் தேநீர் தருகிறாய்
தாத்தாவிற்குச் செல்பேசியில்
பேசக் கற்றுத் தருகிறாய்
இயல்பின் முரணை
உடைத்து நொறுக்கி
என் கண்முன் நிறுத்துகிறாய்
நான் கண்டிருக்க முடியாத
என் சிறுபிள்ளை அம்மாவை

..இரமேசு எழில்

அப்பா... அப்பப்பா...
கலைப்பித்தன்.கா.கணேசன்
அரசுப்பணி உதறிய உங்கள் தன்மானம்
எனக்காய்ப் பொங்கிய அரிசிக்காக
அடகு வைக்கப்பட்டது

என் வாழ்வியலுக்கு நிறம் கொடுக்க
கருப்பாகிப் போனது உமது கலைப்பயணம்

எனது அழுகை நிறுத்த மட்டுமே
கசிந்தது உமது மெல்லிசை

எனக்கு நகைப்பூட்டும் பொருட்டே
வெளிப்பட்டன உம் நல்லோவியங்கள்

என்னைக் களிப்பூட்டவே
காணக்கிடைத்தது
உமது நாடகக்கலை

விட்டெறியும் வெற்றிடங்கள் நிறைந்த
எனது நாளேடுகள் எடுத்தே
நிறைந்து வழிந்தன உமது எழுத்துக்கள்

எனது கலைந்த நூல்களுக்கிடையில்
என்னை விடவும் நிறைந்து பயன்படுத்தும்
உங்கள் நூல்கள் கலைக்கூடம் போல்

உம் கையாளும் திறன்
கற்றுத் தருகிறது எனக்கு
ஒவ்வொரு பொருளின்
பயன்பாட்டையும்

பேசிப்பேசிக் கொல்லும் உலகில்
உமது பேசாமை
என்னுள் உணர்த்தியவையும்
ஒரு நலிந்த கலைஞனாய் நீர்
எமக்குள் நடவு செய்தவையும்
நிறைய நிறைய

எங்கெங்கோ வேலைபார்த்தாலும்
எப்போதும் பெருமையாய்ச்
சொல்வீர் என்னை

ஒவ்வொரு தொழிலும்
அடிபட்டுத் திரும்பினாலும்
எப்போதும்
வலிகளை உணரச்செய்ததில்லை

அரசன் வீட்டுக் கன்றாகவே
ஆடித் திரிவேன்

உணர்ந்திட முடியா
உமது இன்னல்களையெல்லாம்

ஒருசேர உணர்த்துகிறது எனக்கு
உங்கள் தொலைமை
நானுமொரு தந்தையாகி
என் மகளைப் பிரிந்து வந்த பிறகு...

ச.க.இரமேசு எழில்

அம்மா

நன்றி : ஓவியர் மணிவர்மா
உழைத்துக் களைத்தாலும்
எப்போது ஒலிக்கும் அடுத்த குரல்
உன்னித்துக் கொண்டே
உறங்குவாள் அம்மா
உடனே விழிக்க

..இரமேசு எழில்



 

முதல் அழுகை

திங்கற் சுழற்சியில் விடுபட்டு
தலைசுற்றிச் சரிந்து
முலைகளில் முள்குத்தும்
உணர்வை உள்ளுணர்ந்து
உண்ணலின் முன்னும் பின்னும்
ஒவ்வாது கக்கி
அடிவயிறு புடைக்கப்
பனிக்குடத்தில் சுமந்து
எனக்குப் பகிர்ந்தளிக்க
உனக்கென எடுக்கும்
அனைத்தையும் ஆய்ந்து
ஈரைந்து திங்கள்
அனற்மேல் புழுவாய்த் துடித்து
எலும்புகள் நொருங்குதற்கு
இணையான வலி பொறுத்து
ஈன்றெடுத்து ஓய்கையிலும்
உன் நலம் காணாது
எனை மட்டும் பாலினம் கேட்கும்
மாக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி
ஆவலோடு அள்ளியெடுத்து
உன் குருதியைப்
பாலாக்கி ஊட்டினாய்
அறிந்தோ அறியாமலோ
உனக்காய்த் தொடங்கியது
என் முதல் அழுகை
..இரமேசு எழில்
 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தாய்மை…

 
வெறும் விருப்போடு
நின்றிட முடியவில்லை
இழுத்துச் செல்கிறாய் எம்மை
இம்மை கடந்து
தனைத் தாக்கும் தடைகளையும்
உள்வாங்கி ஒளிவிடும்
நெருப்பின் வெம்மை எனக்குள்ளும்
நிறையாத கருப்பையில்
நிறைந்து வலியும் தாய்மையில்
நிலைத்த எம்மைத் தலைகீழ் என்றே
கூறிவிட்டுப் போகட்டும்
உணர்வு மறுத்து வெறும் உறுப்பால்
அளவிடும் கூகைகளின் உலகு
ச.க.இரமேசு எழில்