அப்பா... சித்தப்பா...
தம்பிக்கு,
பிறர் படிக்கக் கூடும் என்பதற்காய் நாம் அஞ்சல் தொடர்பு கூட வைத்துக் கொண்டதில்லை. ஆனாலும் நீண்ட இடைவெளி கடந்து உனக்கு முதன் முதலாய் மின்னஞ்சல் அனுப்புகிறேன். இப்போது விட்டுவிட்டால் எப்போதும் இல்லையென்றெண்ணுவதால் சில செய்திகளை உன்னிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்பா ஒரு மரப்பெட்டி வைத்திருந்தார் அந்தப்பெட்டிப் பக்கம் போகவே விடமாட்டார். அதன் திறவுகோலை எப்போதும் அரைஞாண் கயிற்றிலேயே முடிந்து வைத்திருப்பார். உனக்கும் தெரிந்ததே. இறுதியாக அதை அவர் என்னிடம் கொடுத்தார்.
‘அதுல ஆகாத குப்பைகள் தான் நிறைய’ என்ற அம்மாவின் சொற்களுக்கு செவி சாய்க்காமல் அதைத் திறந்து பார்த்தேன். ஒரு கடிதமும் சில வெட்டப்பட்ட செய்தித் தாள்களும் இருந்தது.
மகனுக்கு, (என்னடா அன்புள்ள என்றுகூட எழுதவில்லையே என்று பார்க்காதே மகன் என்று சொல்லும்போதே அதற்குள் எத்தனை அன்பு தெரியுமா) என்று தொடங்கியிருந்தது.அதில் எழுத்துக்கள் கொஞ்சம்தான். செய்திகள் நிறைய.
தாத்தாவுக்கும் சின்ன தாத்தாவுக்கும் நடந்த சண்டையிலிருந்து நம் அன்பு வரை அதிலிருந்தது. நம் இல்லங்களுக்கு இடையே மதில் கட்டும்போது நாம் அறியாத வயதில் மகிழ்ச்சியாய்க் கல் சுமந்து அது நம்மைப் பிரிக்க என்றறிந்து பின் வருந்தியதைக் கூட அப்பா அறிந்தே வைத்திருக்கிறார்.
மதிலின் அந்தப்பக்கம் நீயும், இந்தப்பக்கம் நானும் நின்று கொண்டு நான் கையை வெட்டிக் கொண்டு உனக்கு மாங்காய் அறுத்துக் கொடுத்ததும், நீ காக்காய்க்கடி கடித்து நெல்லிக்காய் கொடுத்ததும் அப்பாவுக்குத் தெரியும்.
மதிலே வலையென நினைத்து இறகுப்பந்தாடி அதனால் அம்மட்டையாலே அம்மாக்களிடம் நாம் அடி வாங்கியதும் அது அடுப்புக்கு இரையானதும் அவருக்குத் தெரியும். பள்ளிக்கூடத்தில் நம் உண(ர்)வுப் பரிமாற்றமும் தெரிந்திருக்கிறது.
அவர் சேமித்து வைத்த வெட்டப்பட்ட செய்தித் தாள்கள் அனைத்தும் அண்ணன் தம்பி அரிவாள் வெட்டு, மற்றும் அது தொடர்பான வன்முறைகள் பற்றியே இருந்தன. இதன் மூலம் அவர் சொல்லவருவது என்னவென்றால் அவர் தலைமுறைச் சண்டை மதிலெழுப்பியதோடு முடிந்துவிட்டதாம். நம் தலைமுறை வன்முறை நிறைந்ததென்பதே.
எனக்குப் பின் தங்கை பிறந்ததும் இனித் தொடராது பங்காளிச் சண்டை என்று மகிழ்ந்திருக்கிறார்.உனக்கும் தம்பியில்லை தங்கைதான். நானும் மகிழ்கிறேன்.
ஒருதாய்ப் பிள்ளைகளின் சண்டையை நினைத்தே அஞ்சியவர். நம் உறவைப் பார்த்து அஞ்சியதில் வியப்பொன்றும் இல்லை.
இறுதியாக அவர் சொன்னது இதுதான் தாத்தா சாவுக்கு சின்னத் தாத்தா சண்டை போட்டிருந்தாலும் வீட்டுக்கு வந்தாராம். ஆனால் அவர் சாவுக்கு சித்தப்பா வரமாட்டார் என்று அவருக்குத் தெரியுமாம். சொல்லக்கூட வேண்டாம் என்றார். இருந்தாலும் சொல்வது என் கடமை. சொல்லிவிடு வீட்டிலிருந்தபடியே சித்தப்பா இரண்டு சொட்டுக்கண்ணீர் விடக்கூடும்.
அப்பா அஞ்சியது போல அண்ணன் தம்பிச் சண்டைகள் மட்டுமல்ல அண்ணன் தங்கை சண்டைகளும் வராது நமது அடுத்த தலைமுறையில். நாம் தான் ஒற்றைக் குழந்தையோடு நிறுத்திக் கொண்டோமோ.
நான் மூன்றாம் நிலை படிக்கும் போது நீ முதல் நிலை படித்தாயே அது போலவே என் மகளும் உன் மகளும்.
என்ன நாம் அண்ணன் தம்பி என ஒரே பள்ளியில் படித்தோம். அவர்கள் ஒருவருக்கொருவர் யார் என்றே அறியாமல் வெவ்வேறு பள்ளிகளில் வெவ்வேறு நகரங்களில்.
இனி உறவுச் சண்டைகளுக்கு ஒரு போதும் வாய்ப்பில்லை. அவர்களுக்குத்தான் உறவுகளே தெரியாதே.
ச.க.இரமேசு எழில்
(இதுவும் தென்றல் சிறுகதைப்போட்டிக்காக எழுதியதுதான். தேர்வு பெறவில்லை. இன்னும் வளர் என உணர்த்திய தென்றலுக்கு நன்றி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக