புதன், 13 ஆகஸ்ட், 2014

மண்மானம்

 
ஏப்பா? எதுக்கும் இன்னொரு தடவை… அம்மா இழுத்தார்.

எத்தனை தடவைதான் சொல்றது. ஆத்துலயும் தண்ணி வர்ல. கிணறும் வத்திப் போச்சு. இங்கயே கெடந்து சாகணுமா. எனக்கு மட்டும் வருத்தமில்லையா. ஏம்மா புரிஞ்சிக்க மாட்டீங்கற.

அப்பாவிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. மனைவியும் மறுசொல் கூறவில்லை. ஒரு வழியாய் அடிமாட்டு விலைக்கு நிலத்தைவிற்கப் பேசி  முன்பணம் வாங்கியாயிற்று.

’அப்பா இத்தனையும் நீ கொண்டு வந்ததாப்பா?’ மகள் கேட்டாள்.

மண்ணக் கொன்னு வந்தது என்றேன்.

ஏங்க கொழந்தகிட்ட என்ன பேசுறீங்க வாயடைத்தாள் மனைவி.

அப்பாவின் விழி கசிந்தது. ’கண்டதையும் நெனச்சிட்டிருக்காமப் போய்த் தூங்குப்பா’ தழுதழுத்தது குரல்.

’அவனைச் சொல்லிட்டு நீங்க ஏன் அழுவுறீங்க’ என்றாள் அம்மா.
’ஏம்பா காசு வந்தா நம்ம வீட்டில மட்டும் எல்லாம் அழுவறாங்க’.மகளுக்கு என்ன விடை சொல்வது ஒருத்தருக்கும் தெரியல.

அப்பா தொடர்ந்தார் ’எப்பப்பா கெளம்பனும். வேலைக்குப் போற எடத்துல பேசிட்டியா? அங்க மம்பட்டி கொடுப்பாங்கள்ல வெள்ளாமைக் காட்டுலயே வேலை செஞ்சது. கண்டதையும் இத வச்சு அள்ள முடியாது’.

’மண்ணே போச்சு மம்பட்டியக் கட்டிட்டு அழுகுற ஆளப் பாரு’ முணுமுணுத்தாள் அம்மா.

’எய்யா இந்த மாட்டை மட்டுங் கொண்டு போலாமாய்யா அதவுட்டுட்டு என்னால இருக்க முடியாதுய்யா’ அவள் பங்குக்கு மெதுவாப் பேசினாள்.

’இப்பத்தான் மம்பட்டியப் பத்திப் பேசவேண்டாம்னு சொன்ன’ அப்பா இடைமறித்தார்.

’மம்பட்டியும் மாடும் ஒண்ணா’ சண்டை போடவே தொடங்கினாள் அம்மா.

‘அப்பா நாம இங்கிருந்து வேற ஊருக்குப் போறோமா? திரும்பி வரமாட்டமா?’ மனைவியிடமிருந்து திரும்பி என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மகள்.

ஆமாண்டா.

தாத்தா மம்பட்டிய எடுத்துப்பமா? ஆமாம்.

ஆத்தா மாட்டையும் எடுத்துப்பமா?

இல்லைன்னு சொல்ல முடியாம ஆமாம்பா என்றேன்.

’கொய்யா மரத்தையும் எடுத்துட்டுப் போலாம்பா. மரங்களுக்கும் உயிர் இருக்குதாம். எங்க பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்தாங்கப்பா’.

செருப்பாலடித்தது போல இருந்தது எனக்கு.

’நான் வேண்ணா ஒரு கொய்யாப்பழம் கூட திங்காம எல்லாத்தையும் பறிச்சு எங்க பள்ளிக்கூடத்துல வித்துக் காசு கொண்டார்ரேம்பா’
.
பொங்கிய நெஞ்சை கட்டுப் படுத்தி ’இல்லடா நான் அங்க போயி உனக்குக் கொய்யாச் செடி வாங்கித் தர்ரேன் நீ அத வளத்து சரியா’ என்றேன்.

’முடியாது’ என மறுத்தாள். ’அப்படின்னா நீ மட்டும் போ. அங்க போயி ஒரு பாப்பா வாங்கி வளத்து நான் வரல’.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊத்திய மாதிரி இருந்தது. 

ஓவென அழ ஆரம்பித்தாள். தலையைக் கோதினேன் தட்டிவிட்டாள்.

மனைவி ’விடுங்க அவளுக்குத் தூக்கம் வந்திடுச்சு’ என்றாள்.

இல்லையென மறுத்து எழுந்து ஓடினாள். யாராலும் அவளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

இரவு நீண்டு கொண்டே இருந்தது. பத்து விழிகளிலும் உறக்கமே இல்லை. இழவு வீடு போல இருந்தது.

மனைவி பேசத் தொடங்கினாள். ’நீங்க மட்டும் போங்க, மாமா முடிஞ்ச தோட்ட வேலை பாக்கட்டும் அத்தை மாடுமேய்ச்சிட்டே மாமாவுக்கு உதவி பண்ணட்டும். நானும் கூலி வேலைக்கு இங்கேயே போறேன். பாப்பா அதே பள்ளிக்கூடம் போகட்டும்’.

ஓடி வந்து எனைக் கட்டிக் கொண்டாள் மகள். ’ஆமாம்பா நான் குறும்பு பண்ண மாட்டேன் நீ உடனே வரணும்னு அழ மாட்டேன். நீ வரும்போது என்ன வாங்கிட்டு வந்தேன்னு கேட்க மாட்டேன்பா. சரின்னு சொல்லுப்பா சொல்லுப்பா’ செல்லமாய்க் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.

’கை நீட்டிக் காசு வாங்கியாச்சு சொல்லக் காப்பாத்தணும்பா’ அப்பா நினைவுறுத்தினார்.

’இல்லப்பா மண்ணக் காப்பாத்தணும். அவன் கால்ல விழுந்தாவது வாங்குன முன் பணத்தைத் திரும்பக் குடுக்கப் போறேன்’ கொஞ்சம் உரக்கவே சொன்னேன் அப்பாவிடம்.

நேரத்திலேயே எழுந்து முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து கிளம்பத் தயாரானேன்.

அப்பா முகத்தில் சிரிப்பு.

அம்மா போயிட்டுவாப்பான்னு சொல்லிக்கிட்டே மாட்டின் முதுகு நீவினாள்.

பெருமையோடு பார்த்தேன் மனைவியை. எல்லாம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் ஓரமாக நின்று கையசைத்தாள்.

கொய்யா மரத்தின் பின்னிருந்து ஓடி வந்தாள் மகள். ஒரு முத்தமிட்டு இது பாப்பா முத்தமென்றாள். அடுத்த முத்தம் அழுத்தமாக இட்டு இது அம்மா கொடுக்கச் சொன்னது என்றாள். குறும்புக்காரி. 

பஞ்சம் பிழைக்கப் பட்டணம் போகிறேன் என்றாலும் மண்ணை விற்காத மகிழ்ச்சி எனக்குள்.


ச.க.இரமேசு எழில்

(தென்றல் சிறுகதைப்போட்டிக்காக எழுதியது. தேர்வு பெறவில்லை. இன்னும் வளர் என உணர்த்திய தென்றலுக்கு நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக