திங்கள், 14 டிசம்பர், 2015

துளையிட்ட கலனில் நீர்நிறைத்தல்
உன்மீது நான் பொழியும் அன்பு
ஒருபோதும் கிடையாது உளநிறைவு

----------------------- எழில் (ச.க.இரமேசு)
புல்லாங்குழல் விரும்பாத ராதை
பறையடிக்கக் கற்கும் கண்ணன்
மாந்தவியல் முன்னேற்றம்

---------------------- எழில் (ச.க.இரமேசு)
தாளில் வரைந்த பட்டாம்பூச்சி
பறக்காது என்பதைப் பொய்யாக்கும் மகள்
சுழல விடுகிறாள் மின்விசிறியை

----------------------------- ச.க.இரமேசு
பூக்கள் பறிக்கும் மாந்தர்
செடியின் முகவரி அறிய முனைகையில்
கைதட்டும் மலர்க் காடுகள்

------------------------ எழில் (ச.க.இரமேசு)
மறைந்து விட்டீர்கள் என்கிறார்கள்
துளித் துளிப்பாக்களில் என்றும் மறையாது
வாழ்கிறீர்கள் என்பது அறியாதவர்கள்

--------------------------------- எழில் (ச.க.இரமேசு)
உனக்கும் எனக்குமான உரையாடல்
துளிப்பா போலத்தான் அளவிற் சிறிதாயினும்
அதன் அழுத்தம் மிகையானது

---------------------- எழில் (ச.க.இரமேசு)
விடியலை நோக்கி ...

தொடர் வண்டியைக் காட்டிலும்
பிணங்களையே மிகையாகச் சுமக்கப்
பழகிக் கொண்டு விட்டன தண்டவாளங்கள்

இறந்த பின்னும்
கொன்று கொண்டேயிருத்தலும்
இங்கே முறைமையாகிவிட்டன

இன்னும் செருப்பைக் கையிலெடுத்தே
பயணிக்கிறார்கள் எம் பள்ளிச் சிறார்கள்

எரிக்கப்படுகிறது
சேரிக்குள் வர முயலும்
கடவுளின் தேரும்
கடவுளின் பிள்ளைகளின் ஊரும்

மொழியை முடமாக்கி
உட்பிரிவின் உட்புகுந்து
முதுகெலும்பு முறிக்கப் படுவது
உணரமுடிகிறது நன்றாய்

வீழும் உடல்கள் குறைவதில்லை
விதைத்த விதைகளும் இங்கே அப்படியே
விடியலை நோக்கி விரையும் நம் பயணம்
எழுச்சியோடு மீட்டெடுப்போம்
நாளைய மலர்ச்சி நமக்கானதே

----------------------- எழில் (ச.க.இரமேசு)

[பாக்கூடல்(கவிதை சங்கமம்) குழுமத்தில் நிகழ்ந்த போட்டியில்
இரண்டாமிடம் பெற்ற பா]